ஸ்ரீமத் பாகவத புராணம்
1. பரீட்சித்து
அறிமுகம்
உலக க்ஷேமத்துக்காக-மங்களகரமான விஷயத்தை அறிந்து கொள்வதற்காக -இதை எழுதுகிறேன். பகவா னிடம் பக்தி கொள்வதே ஜீவன்களுக்குச் சிறந்த தர்ம மாகும். பகவானுடைய நாம ஸ்மரணையும் அவனுடைய அவதார லீலைகளைப் பக்தியோடு சிரவணம் செய்வதுமே சிறந்த உபாசனையாகக் கலியுகத்தில் கூறப்பட்டுள்ளது. தம்முடைய கதையைக் கேட்பவர்களுடைய உள்ளங்களில் பகவான் இருந்து கொண்டு அவர்கள் மனத்திலுள்ள காமம் முதலான அழுக்குகளை அகற்றிவிடுகிறார். அதனால்தான் மகான்கள் வாசுதேவனிடம் பக்தி பூண்டு இருக்கிறார்கள்.
சத்துவம், ராஜசம், தாமதம் என்ற மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. அவற்றோடு கூடிய பகவானே இப்பிரபஞ்ச சிருஷ்டிக்குக் காரணமானவர். ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற காரியங்களுக்கு ஏற்ப அவரே பிரமதேவனாகவும், அரியாகவும், அரனாகவும் விளங்கு கிறார். யாகங்களும் அவரை ஆராதிக்க உண்டானவையே. சாஸ்திரங்களும் அவரையே பிரதானமாகக்கொண்டுள்ளன.
எல்லாக் காரியங்களும் அவரைத்
திருப்திபடுத்தவே சொல்லப்பட்டுள்ளன. பகவான் ஜீவன்களிடத்தில் அவரவர் களின் தகுதிக்கேற்ப தோற்றம் கொண்டுள்ளார். அவர் சத்வ குணத்தினால் சகல சிருஷ்டிகளையும் பரிபாலித்து வருகிறார்.
குருக்ஷேத்திரம்
பாரதப் போரின் இறுதிக் கட்டம். பாண்டவர் தரப்பி லும் கௌரவர் தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் போரிட்டு வீர சுவர்க்கத்தை அடைந்தனர். பீமன் தன் கதையால் துரியோதனனுடைய தொடையை முறித்தான்.
துரியோதனன் கீழே விழுந்து மரண அவஸ்தையில் இருந் தான். அதைக் கண்ட அசுவத்தாமன் துரியோதனனைத் திருப்தி செய்ய எண்ணினான். அவன்தான் கடைசி கௌரவ சேனாதிபதி. பாண்டவர்களுடைய பாசறையில் புகுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த உப பாண்டவர்கள் எனப் படும் பாண்டவர்களின் மைந்தர்கள் ஐவரையும் கொன்று அவர்களுடைய தலைகளைக் கொண்டு வந்து துரியோ தனன் முன்பு போட்டான். பாரதத்தின் சௌப்திக பருவத்தில் இச்செய்தி சொல்லப்பட்டுள்ளது. சௌப்திகம் என்றால் உறங்குபவர்களைக் கொல்லுதல் என்பது பொருள். இது மகாபாதகமாகக் கருதப்படுகிறது. துரியோதனன் மிகவும் வருந்தினான்,
இச்செய்தியை அறிந்து, அர்ச்சுனன் ஆத்திரமடைந்து அஸ்வத்தாமனுடன் போரில் ஈடுபட்டான். பலவித அஸ்திரங்கள் இருதரப்பிலும் பிரயோகிக்கப்பட்டன. கடூரமான போர் நடந்தது. இறுதியில் அஸ்வத்தாமன் சிறை பிடிக்கப்பட்டான்.
அஸ்வத்தாமன்
பிராமண குலத்தில் பிறந்தவன் ஆதலாலும், குருவாகிய துரோணருடைய மகனாதலாலும் அவனைக் கொல்வது உசிதமில்லை என்று அர்ச்சுனன் கருதி
னான். கிருஷ்ண பரமாத்மா கூறிய ஆலோசனையின்படி அர்ச்சுனன் அஸ்வத்தாமனுடைய சிகையையும் தலையில் கட்டியிருந்த மணியையும் வானால் துண்டித்து எறிந்தான்; அஸ்வத்தாமனை விடுதலை செய்து கூடாரத்துக்கு வெளியே துரத்திவிட்டான். சாஸ்திரத்தில் பிராமணர்களைத் தண்டிப்பதற்கு இப்படி ஒரு வழி உள்ளது.
பின்னர் பாண்டவர்கள் போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்ய கங்கைக் கரைக்குச் சென்றனர். கிருஷ்ணன், திருத ராட்டிரன், காந்தாரி, குந்தி முதலியோர்க்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாண்டவர்களிடம் விடை பெற்றுத் துவாரகைக்குப் புறப்பட்டார்.
அப்போது சுபத்திரை அங்கே ஓடி வந்தாள். ‘அண்ணா!அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருப்பத்தி லிருந்த சிசுவை அழிப்பதற்காக அஸ்வத்தாமன் அபாண்ட அஸ்திரத்தை ஏவியுள்ளான். அந்த ஆபத்திலிருந்து சிசுவைக் காப்பாற்ற வேண்டும் என்று கதறினான். பயப்பட வேண்டாம் என்று கண்ணபிரான் அபயம் அளித்தார்.
அவமானம் தாங்கமாட்டாமல் அஸ்வத்தாமன் கடைசி முறையாகப் பாண்டவர்கள் வம்சமே நிர்மூலமாக வேண்டும் என இதை ஏவிவிட்டுள்ளான் என்பதை பகவான் அறிந்து கொண்டார். சக்கரத்தை ஏவி அந்த அஸ்திரத்தைத் தம்மிடம் கிரகித்துக் கொண்டார். அதனுடன் உத்தரை யின் கருப்பத்தில் வளர்ந்து வரும் கருவுக்கு ஆபத்து நேரா வண்ணம் பார்த்துக் கொண்டார். குந்திதேவி, தம் மக்களைக் காப்பாற்றியதோடு வம்சம் அற்றுப் போகாமல் காப்பாற்றியதற்காகவும் கண்ணனை வணங்கிப் போற்றி
னாள்.
பின்னர்
அனைவரும் அஸ்தினாபுரம் சென்றனர்.
அங்குச் சில நாள் தங்கியிருந்து கண்ணன் துவாரகைக்குச் செல்ல எண்ணினார்.
பீஷ்மர்
போரில் ஏற்பட்ட காயங்களால் உடலெங்கும் ரணமாகி அம்புப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருந்தார். உத்தரா யணத்தை எதிர்நோக்கி உயிரை விடாது, உடல் வேதனை யைச் சகித்துக் கொண்டிருந்தார். அப்பெருமானைக் காண்பதற்காகத் தருமர் முதலானோர் சென்று, அவரை வணங்கினர். அவரைத் தரிசிப்பதற்காக பர்வதர், நாரதர் முதலான ரிஷிகளும் அங்கு வந்திருந்தனர். எழுந்திருக்க இயலாமையால் பிதாமகர் அவ்விடம் வந்திருந்த முனிவர் களுக்குத் தம் மனத்தால் வந்தனம் செய்தார்.
எதிரில் நின்றிருந்த கிருஷ்ணனை உள்ளத்தில் வழி பட்டார். பாண்டவர்களை நோக்கிக் கூறலானார்.
தர்ம சிரேஷ்டர்களே! உங்கள் மனத்தில் குடி கொண்டிருக்கும் எண்ணங்களை நான் அறிவேன் எண்ணற்ற பந்து மித்திரர்களைப் போரில் கொன்று வீண் பழிக்கு ஆளாகி விட்டோமே என்று வருந்துகிறீர்கள். இவ்வுலகில் இவையனைத்தும் உங்களால் நடக்க வேண்டு மென்று விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதைக் குறித்து நீங்கள் வருந்த வேண்டா. உங்களால் நாள் கண்ணனைத் தரிசித்தேன். உயிர் பிரியும் நேரத்தில் கண்ணனைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்' என்றார்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |