தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி, அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கிறான். அதிலிருந்த வேதாளம் எள்ளி நகைத்து, 'மன்னனே! இந்த பயங்கர இரவில் நீ இப்படி முயல்வது உன் அறியாமையோ என்று சந்தேகத்தை உண்டாகுகியது. சில சமயங்களில் பெரியவர்கள்கூட அறிவற்றவர்கள் போல நடந்து கொள்வதும் உண்டு. இதை விளக்க, ஒரு கவிஞனின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்' என்று கூறிக் கதையை ஆரம்பித்தது.

வேதாளம் சொல்லும் கதை:

ஒருமுறை மால்வாவில் ஒரு கிராமத்தில் மனோகரன் என்றொரு கவிஞர் வாழ்ந்து வந்தார். இலக்கணத்தில் முறையான கல்வி இல்லாவிட்டாலும், எந்தவொரு தலைப்பிலும் தன்னிச்சையாக நேர்த்தியான கவிதைகளை உருவாக்கும் குறிப்பிடத்தக்கத் திறமை அவருக்கு இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மனோகரனின் திறமைகள் அவ்வூரார் கவனத்தை ஈர்த்தது, அவர் மன்னன் மகேந்திர பூபதியைச் சந்திக்கவும், அரச சபையில் பதவி பெறவும் தலைநகருக்குச் செல்ல ஊக்குவித்தார். இருப்பினும், கலைஞர்கள் சபையில் சேருவதற்கு முன்பு ஜமீன்தாரின் கீழ் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

இந்த விதிக்குப் புறம்பாக மனோகரன் எப்படிச் செயல்பட முடியும்? எனவே தன் ஊரை அடுத்துள்ள விஜயபுர ஜமீன்தாரர் வீரசிம்மரிடம் பணி புரிவது என எண்ணினான். தன் தந்தையிடமும் தன் எண்ணத்தைக் கூறினான்.

அவனது தந்தையும் 'அரச சபையில் இடம் பெறுவது எளிதல்ல. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும். அங்கு விருப்புவெறுப்பு என்னும் சக்திகள் சர்வசாதாரணமாக விளையாடுபவை. எனவே நீ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால், நீ முதலில் ஜமீன்தாரரிடம் பணி புரிந்தாக வேண்டும்.
நீ அவரைக்காண ஒரு நல்ல நாள் குறித்துக் கொடுக்கிறேன்' என்று கூறி நாளையும் குறித்துக் கொடுத்தார். அவனும் அந்த நாளில் தன் தந்தையின் அனுமதி பெற்றுக் கிளம்பிச் சென்றான்.

மனோகரன் வீரசிம்மரின் மாளிகையை அடைந்தபோது அங்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு விவாகமான அவரது மகள் விதவையாகி விட்டாளாம். அவளும் அவள் கணவன் அன்று காலை பூந்தோட்டத்திற்குச் சென்ற போது, அவளது கணவனை ஒரு விஷப்பாம்பு தீண்டிவிட்டதால் அவன் இறந்து விட்டானாம்.

தான் புறப்பட்ட வேளை சரியானதாக இல்லை என்றும், இனி ஜமீன்தாரரை அப்போது காண்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்று அரிந்த கொண்ட மனோகரன் உடனேயே அங்கிருந்து தன் ஊருக்குத் திரும்பிப் போய் விட்டான்.

அவன் தன் தந்தையிடம் ஜமீன்தாரரின் வீட்டு நிலையைக் கூறி 'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. நீங்கள் குறித்துக் கொடுத்த நல்லவேளையில் கிளம்பிப் போயும் வேலை நடக்கவில்லை! என்ன செய்வேன்?' என்று மனம் வருந்தினான். அவனது தந்தையும் 'நானாகப் பார்த்து நல்ல வேளையில் உன்னை அனுப்பி வைத்தது உனக்குச் சரியாகப் பட்டுவந்ததில்லை. ஒருவாரம் கழித்து, நீ சகடபுர ஜமீன்தாரர் சட்டநாதரைப் போய் பார். இம்முறை நீ புறப்படுவதற்கான நல்ல நேரத்தை என் நண்பனைக் குறித்துக் கொடுக்கச் சொல்கிறேன்' என்றார்.

அவன் மனதில் 'இம்முறையும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. இரு முறைகளிலும் நான் நல்ல நேரம் பார்த்துத் தான் கிளம்பினேன். ஆனால் என்ன பயன்? இரு முறைகளிலும் தடங்கல் ஏற்பட்டு ஜமீன்தாரரைப் பார்க்க முடியாமலே போய் விட்டதே. இனி என்ன செய்வது?' என்று எண்ணிக் கவலைப்படட்டான்.
தன் தந்தையின் நண்பர் குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில் கிளம்பி, மனோகரன் சகடபுரத்தை அடைந்தான். ஆனால் அதற்கு முந்தைய தினத்திலிருந்து சட்டநாதர் ஏதோ ஒரு நோயால் அவஸ்தைப்படுவதாகவும், வைத்தியர்களால் அது என்ன நோய் என்று கண்டுபிடித்து, அதற்கு ஏற்ற மருந்து கொடுக்கவும் முடியவில்லை என்றும் மனோகரனுக்குத் தெரிந்தது.

அம்முறையும் தன் முயற்சி பலிக்காமல் போனதைக் கண்டு மனோகரன் மனமுடைந்து போனான். அவன் மிகவும் வருத்தத்தோடு தன் ஊருக்குத் திரும்பிச் செல்லலானான். அப்போது வழியில் கண்ட ஒரு குளத்தில் இறங்கி, நீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்ட பின், அதன் கரையில் அவன் ஒரு மரத்தடியே படுத்துச் சற்று இளைப்பாறினான்.

சற்று நேரத்திற்குப் பின் அவ்வழியே வந்த ஒரு பயணி குளத்தைக் கண்டதும், அதில் இறங்கி நீர் குடித்துத் தன் தாகத்தைத் தணித்துக் கொண்டான். அவன் குளக்கரைக்கு வந்து, ஒரு மரத்தடியே படுத்திருக்கும் மனோகரனைக் கண்டான். அவனது முகம் வாட்டமுற்றிருப்பதைக் கண்ட அப் பயணி, அவனருகே சென்று, 'ஐயா! தாங்கள் யாரோ? ஏன் கவலையுடன் இருக்கிறீர்கள்?' என்று பரிவுடன் கேட்டான்.

மனோகரனும் எழுந்து, 'நான் ஒன்றும் பெரிய பிரமுகனல்ல. துரதிர்ஷ்டம் பிடித்த ஒரு கவிஞன்' என்று விரக்தியுடன் கூறினான். பயணியும், 'கவிஞரா? துரதிர்ஷ்டம் பிடித்தவரா? எங்கே உங்கள் கையைக் காட்டுங்கள். ரேகை பார்த்துச் சொல்கிறேன்' என்றான். மனோகரனும் தன் வலது கையை நீட்டவே, பயணியும் அதைப் பார்த்துவிட்டு, 'இன்னும் மூன்று மாதங்களுக்கு நீங்கள் உங்கள் வீட்டைவிட்டு நகர வேண்டாம். அதன் பிறகு வரும் மாசி மகத் தன்று உங்கள் ஊரின் கிழக்குத் திசையில் சென்று, முதலில் வரும் ஜமீனை அடைந்து, அந்த ஜமீன்தாரிடம் பணி புரியுங்கள். அதன் பிறகு உங்களுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்' என்று கூறிவிட்டுச் சென்றான்.

மனோகரன் எழுந்து, அந்த சோதிடன் கூறியதை எண்ணியவாறே, தன் ஊர் போய்ச் சேர்ந்தான். அவ்வூரின் கிழக்கே உள்ள முதல் ஜமீன்தார் சிங்கராயர். அவர் வக்கிரபுத்தி கொண்டவர். அவரைப் பற்றிப் பல வேடிக்கைக் கதைகள் மக்களிடையே பரவி இருந்தன. கவிஞர்களின் கவிதைகளைக் கேட்டு, வெற்றிலை பாக்கில் ஒரு பைசா வைத்து, பல கவிஞர்களுக்குக் கொடுத்து அனுப்பியவராம். இப்படிப்பட்டவரிடம் போய் பணி புரிவதா என்று மனோகரன் யோசனையில் ஆழ்ந்தான்.

மூன்று மாதங்கள் பிறகு, அவன் மாசி மகத்தன்று சிங்கராயரைக் காண, அவரது மாளிகைக்குச் சென்றான். அப்போது அவரது திவான், 'இன்று ஜமீன்தாரரின் தந்தையின் திவச நாள். எனவே மாலை வரை அவரைக் காண முடியாது' என்றார்.

அவன் திவானிடம், 'சரி. மாலையாகும் வரை இங்கேயே காத்திருக்கிறேன். அதற்குப் பிறகு அவரைக் காண்கிறேன். அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுங்கள். நான் ஒரு கவிஞன்' என்று வேண்டினான்.

திவானும் மனோகரனை ஒரு முறை பார்த்து விட்டு, 'ஏனோ உனக்கு உதவ என் மனம் விரும்புகிறது. நீ இன்று மாலை ஜமீன்தாரரைக் காண ஏற்பாடு செய்கிறேன்' என்றார். அவனுக்கு உணவு உண்ணவும் அவர் ஏற்பாடு செய்தார்.

அப்போதும் மனோகரன் தனக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை என்று எண்ணலானான். அம்முறையும் ஜமீன்தாரரைக் காண முடியவில்லை. ஆனால், திவான் கூறிய உறுதியும், முன்பு குளக்கரையில் சோதிடம் சொன்ன பயணியின் வார்த்தைகளும் அவன் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தின. பொறுத்திருந்தான் அவன்.

மாலையாகியது. மனோகரனுக்கு ஜமீன்தாரரைக் காண, அதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இருட்டியும் விட்டது. அப்போது திவான் வந்து, 'ஐயா! உங்களைப் பற்றி ஜமீன்தாரரிடம் கூறினேன். அவரது தந்தைக்குக் கவிதை மிகவும் பிடிக்குமாம். அவரது திவச நாளில் தாங்கள் வந்ததால், தங்களை ஜமீன்தார் ஆஸ்தான கவிஞராக நியமிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களுக்கு ஆயிரம் வராகன்களும், பட்டாடைகளும், ஒரு குதிரைவண்டியும் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். தினமும் மாலையில் வந்து, நீங்கள் உங்கள் கவிதைகளை அவருக்குக் கூற வேண்டும். இதற்கான ஏற்பாட்டுகள் தயார்' என்றார்.

அது கேட்ட மனோகரன் மலைத்துப் போனான். அவன் அவற்றை ஏற்று, திவானுக்கும், ஜமீன்தாரருக்கும் நன்றி கூறி, வண்டியில் ஏறித் தன் ஊரை அடைந்தான். அவனை அதிர்ஷ்டம் கை விட்டுவிடவில்லை. முடிவில் அவன் முயற்சி பலித்தேவிட்டது. ஜமீன்தாரரிடம் வேலை செய்ய வாய்ப்பும் கிடைத்துவிட்டது. அதன் பின் ஓராண்டுக் காலம், மனோகரன் அந்த ஜமீன்தாரரிடம் ஆஸ்தான கவிஞனாகப் பணிபுரிந்தான்.

ஒருநாள், வண்டியை ஓட்டுபவன் என்ன காரணத்தாலோ வராததால், மனோகரன் நடந்தே சென்றான். வழியில் ஒரு குளத்தைக் கண்டு, அதன் நீரைப் பருகி தாகம் தணித்துக் கொண்டு, அங்கே சற்று இளைப்பாறினான். அப்போது அங்கு ஒரு பயணி மரத்தடியே அமர்ந்திருப்பதைக் கண்டான்.

அவனருகே ஒரு குதிரை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவன் மனோகரனைப் பார்க்கவே, அவனும் அப் பயணியருகே சென்றான். அப்பயணியும், 'ஐயா! நீங்கள் யாரோ?' எனக் கேட்டான்.

முன்பு கைரேகை பார்த்துச் சொன்ன பயணியின் நினைவும், மனோகரனுக்கு வந்தது. அவன் உடனே, 'நான் அதிர்ஷ்டசாலி. துரதிர்ஷ்டசாலி அல்ல' என்றான்.

பயணியும், 'வேடிக்கையான பதிலாக இருக்கிறதே' என்றான். மனோகரனும் 'மன்னிக்க வேண்டும். ஏதோ நினைவில் என்னவோ கூறிவிட்டேன். உங்கள் கேள்விக்கு விடையாக ஒரு கவிதை கூறுகிறேன்' என்று கூறி, பொருள் புதைந்த கவிதை ஒன்றை உடனே கூறினான்.

அதன் கருத்து:

'பெளர்ணமி நிலவில், ஒரு பூந்தோட்டத்து மலர்கள் நறுமணத்தைப் பரப்புகின்றன. அந்த நறுமணத்தில் கவரப்பட்ட வண்டுகள், மலர்களின் தேனைத் திருப்தியாகப் பருகுகின்றன. அப்போது பேரழகி ஒருத்தி, வாடிய முகத்துடன் அம்மலர்களிடையே அமர்ந்திருக்கிறாள். இதைக் கவனித்த மலர்கள், 'என்னம்மா! ஒருநாள் காலையில் மலர்ந்து, அன்று மாலையிலே வாடிவிடும் நாங்களே மகிழ்ச்சியாக இருக்கையில், வாடாத செந்தாமரை போன்ற உன் முகம் ஏன் வாட்டமுற்றுள்ளது?' என்று கேட்டன. அவளோ 'நானும் மலர்தான். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவை, வண்டுகளல்ல, காற்றில் நான் அசைந்தாடும்போது குத்தும் முட்கள்' என்றாள்.'

கவிதையைக் கூறியபின், மனோகரன், 'அந்தப் பேரழகி என் கவிதை. அவளுக்கு என் மனதில் இருக்க இடம் கொடுத்த துரதிர்ஷ்டசாலி நான். என் குடும்பத்தை நன்கு கவனிக்கும் அதிர்ஷ்டசாலி நான்' என்று கூறி, தனக்கு நேரமாவதாகச் சொல்லி, அவரை வணங்கி விட்டுச் சென்றான்.

ஒருவாரத்திற்குப் பிறகு, ஒரு நாள் காலையில், அரசுக்குச் சொந்தமான குதிரை வண்டி ஒன்று மனோகரனின் வீட்டு வாசலுக்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய இரு வீரர்கள், மனோகரனைக் கண்டு வணங்கி, 'தங்களை அரசாங்க மரியாதைகளுடன் அழைத்து வரும்படி, மகாராஜா கட்டளை இட்டிருக்கிறார்' என்றார்கள்.

அப்போது மனோகரனுக்குத்தான் ஒரு வாரத்திற்கு முன் சந்தித்த பயணியின் நினைவு வந்தது. அவர்தான் மகாராஜா என அவன் தெரிந்து கொண்டான். அவன் அரண்மனை அடைந்ததும், மகாராஜாவே அவனை வரவேற்று, 'இளம் கவிஞரே! இனி தினமும் உங்கள் கவிதைகளால் என்னை மகிழ்விக்க வேண்டும்' என்றார்.

மனோகரனும் 'ஆஹா! மகிழ்ச்சியுடன் செய்கிறேன். ஆனால் இப்போது சிங்கராயரின் ஆஸ்தான கவிஞன் நான். அவரிடம் ஊதியம் பெற்று வருகிறேன். அவரிடம் சொல்லி விட்டு, அவரது அனுமதி பெற்றுக் கொண்டு, உங்கள் பணியை மேற் கொள்கிறேன்' என்றான். மகாராஜாவும், 'ஆஹா! எவ்வளவு உயரிய பண்பாடு! கவிதையோடு, பண்பும் சேர்ந்து உங்களை மிகவும் உயர்த்திவிட்டது. உங்களது விருப்பப்படியே செய்யுங்கள்' என்று கூறி அனுப்பினார்.

கதையின் முடிவு:

வேதாளம் இக்கதையைக் கூறி, 'மனோகரனுக்கு நிம்மதியையும் கொடுத்து, நல்வாழ்வை அளித்தவர் மகாராஜா. ஆனால் மனோகரனின் வாழ்வு, சிங்கராயரிடம் பணிபுரிந்து வந்த போது, முட்கள் சூழ்ந்த ரோஜா மலர் போல இருந்தது. அவனுக்கு நல்வாழ்வு அளித்தவர் மகாராஜா. அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருப்பதைவிட்டு, சிங்கராயரின் அனுமதி பெற்று வருவதாகக் கூறியது, அவனது அறிவீனத்தைத்தானே காட்டுகிறது? இதை மகாராஜா, அவனது உயரிய பண்பு எனக் கூறிப் பாராட்டினாரே. இது சரியா?'

மனோகரனின் நடத்தையும், மகாராஜாவின் போக்கும் சரியா அல்லது தவறா? இச்சந்தேகங்களுக்குச் சரியான விடைகள் தெரிந்திருந்தும், நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்' என்றது.

விக்கிரமனின் பதில்:

விக்கிரமனும், 'மனிதன் தன் வாழ்க்கையில் கலையைவிட, ஞானத்தையே முதலில் விரும்புகிறான். எனவே, மனோகரனின் குடும்பம் வயிறாரு உண்டு வாழ உதவியவர் சிங்கராயர். ஆனால் மனோகரனின் கவிதை அவரது ஆதரவில் பிரபலமாகவில்லையே என்றால், அதற்குக் காரணம் சிங்கராயரின் போக்கே. அதைப் பற்றிப் பேசுவது, அவரைக் குறைகூறுவது போலாகும். அவ்வாறு செய்யும் இயல்பு மனோகரனிடம் கிடையாது. எனவே அவன் தன் நிலையை ஒரு கவிதை வாயிலாக, பயணியாக வந்த மகாராஜாவிடம் கூறினான். அதிலும், சிங்கராயரின் பெயரோ, அவனது பெயரோ இருக்கவில்லை. இதைக் கண்ட மகாராஜா, அவனிடம் உயரிய பண்பு இருப்பதாகக் கூறினார். மகாராஜா கொடுக்க முன்வந்த பதவியை ஏற்றுமுன், தன் செய்ய வேண்டிய கடமையைக் கூறியும், மனோகரன் தன் உயர் நெறியைக் காட்டினான். மகாராஜாவும் அவ்வாறே செய்யச் சொன்னதும், அவரது பரந்த மனப்பான்மையையும், உயரிய பண்பையும் காட்டுகிறது. எனவே, இருவரது செயல்களும் நல்நறிவோடு செய்யப்பட்ட செயல்களே' என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால், அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு, வேதாளம் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

103.8K
15.6K

Comments

Security Code

89585

finger point right
கதைகளுக்கெல்லாம் மணி மகுடமாக திகழ்கிறது இந்த விக்கிரமாதித்தன் கதைகள். இன்று அதன் ஒரு பகுதியை படித்து மகிழ்வுற்றேன். நன்றி. -RAJAGOPALAN.V

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

வாழ்க வளமுடன் மனிதனின் மன அமைதிக்கான சிறந்த வலைத்தளம் -ராஜ்குமார்

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

Read more comments

Knowledge Bank

பூமியில் ஜெய-விஜயாவின் மூன்று அவதாரங்கள் எவை?

1. ஹிரண்யாக்ஷன்-ஹிரண்யகசிபு 2. ராவணன்-கும்பகர்ணன் 3. சிசுபாலன்-தண்தாவக்ரன்.

யோகத்தில் மூன்று வகையான ஆச்சார்யர்கள் யார்?

1. சோதகம்: நீங்கள் யோகத்தில் நுழைவதற்கான ஊக்கம் அல்லது உத்வேகம் 2. போதகம்: உங்களை எழுப்பும் குரு 3. மோக்ஷதம்: சுய-உணர்தல் என்ற இறுதி இலக்கிற்கு உங்களை அழைத்துச் செல்பவர்.

Quiz

அர்ஜுனனின் மகன் யார்?

Recommended for you

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரத சமுதாயம் வாழ்கவே

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்க�....

Click here to know more..

கடன்களிருந்து நிவாரணம் பெற கணேச தியானம்

கடன்களிருந்து நிவாரணம் பெற கணேச தியானம்

கடன்களிருந்து நிவாரணம் பெற தினந்தோறும் இந்த த்யான வழிப....

Click here to know more..

கணேச மங்கள ஸ்துதி

கணேச மங்கள ஸ்துதி

பரம் தாம பரம் ப்ரஹ்ம பரேஶம் பரமீஶ்வரம். விக்னநிக்னகரம் �....

Click here to know more..