தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்.
பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி நடந்து செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து 'மன்னனே! இந்த பயங்கர நள்ளிரவில் நீ இவ்வளவு சிரமப்பட்டு எதையோ சாதிக்க முயல்வதைப் பார்த்தால் நீ உன் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இவ்வாறு தனது நிலை புரியாமல் நடந்து கொண்ட கோவிந்தன் என்ற இளைஞனின் கதையைக் கூறுகிறேன் கவனமாகக்கேள்' என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.
காஞ்சனபுர மன்னன் காந்திவர் மனுக்கு ஒரு புதல்வியும் ஒரு புதல்வனும் இருந்தனர். புதல்வி புஷ்பலதா மூத்தவள்.
அவள் வளர்ந்து விவாகவயதை அடைந்ததும் மன்னன் அவளுக்குத் திருமணம் செய்ய எண்ணினான். அதை அவளிடம் கூறவே புஷ்பலதாவும் 'தந்தையே! நான் திருமணம் செய்து கொள்கிறேன்.
ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை.
யார் ஒரு பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து எனக்குக் கொடுக்கிறாரோ அவரைத்தான் நான் மணந்து கொள்வேன்' என்றாள்.
அதைக்கேட்ட மன்னன் திகைத்து ‘மகளே! பறக்கும் குதிரை என்பதைக் கதைகளில் தான் படித்திருக்கிறோமேயொழிய யாரும் அதை நேரில் கண்டதில்லை.
இந்த ஆசையை விட்டு விடு' என்றான்.
ஆனால் புஷ்பலதாவோ பிடிவாதமாக 'எனக்குப் பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து கொடுப்பவனைத்தான் நான் மணப்பேன்.
வேறு யாரையும் மணக்கமாட்டேன்' என்று கூறி விட்டாள்.
தன் மகளின் பிடிவாதத்தைத் தகர்க்க முடியாதெனக் கண்ட மன்னன் பறக்கும் குதிரையைக் கொண்டு வந்து தன் மகள் முன் நிறுத்துபவருக்குத் தன் மகளை மணம் செய்து வைப்பதாக நாடெங்கும் பறைசாற்றுவித்தான்.
இதனை அறிந்து பல அரசகுமாரர்கள் பறக்கும் குதிரை எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தர்கள்.
ஆனால் அவர்களுக்கு அது எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே அவர்கள் தம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள்.
இப்படியே ஒரு வருடம் கழிந்தது.
அந்த நாட்டில் கோவிந்தன் என்ற இளைஞன் இருந்தான்.
அவன் நல்ல அழகன்.
ஆனால் தாய் தந்தையற்ற அனாதை.
அவன் அவ்வூர் பெருமாள் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் வேலைக்கு அமர்ந்து பூமாலைகள் தொடுத்து கோவிலுக்குக் கொடுத்து கோவிலில் கிடைக்கும் பிரசாதமான உண்டக்கட்டியை வாங்கி உண்டு வளர்ந்தான்.
அவன் மன்னனின் அறிவிப்பைக் கேட்டதும் 'நான் பறக்கும் குதிரையைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்து அரசகுமாரியின் முன் நிறுத்தி அவளை ஏன் மணந்து கொள்ளக் கூடாது?' என்று எண்ணினான்.
எனவே அவன் கோவில் அர்ச்சகர் நரசிம்மபட்டரிடம் விஷயத்தைக் கூறி 'பறக்கும் குதிரை எங்கே கிடைக்கும்?' என்று கேட்டான். பட்டரும் 'கோவிந்தா! நீ அதிகம் படிக்கவில்லை.
அதனால் அக்குதிரை பூவுலகில் இருப்பதாக நினைக்கிறாய்.
அது பூலோகத்தில் இல்லை. தேவலோகம், கந்தர்வலோகம் போன்ற பிற உலகங்களில் நீ போனால் அதைக் காணமுடியும்'' என்றார்.
அங்கு எப்படிப் போவது என்று கோவிந்தன் கேட்கவே பட்டரும் ' நீ விந்திய மலைக் காட்டிற்குப் போனால் மலை உச்சியில் சில குகைகளும் தடாகங்களும் சோலைகளும் உள்ளன.
இரவு வேளைகளில் கந்தர்வ கன்னிகைகள் அங்கு வந்து போகிறார்கள்.
அவர்களின் உதவியால் நீ கந்தர்வலோகம் சென்றால் அங்கு பறக்கும் குதிரையைக் காணலாம்'' என்றார். கோவிந்தனும் பட்டரிடம் தான் விந்தியமலைக்குப்போய் வருவதாகக் கூறிக் கிளம்பிச் சென்றான்.
பட்டர் கூறிய படி அவன் மலையின் உச்சியை அடைந்த போது ஒரு சில குகைகளையும் ஒரு தடாகத்தையும் அதன் கரையில் பெரிய மரங்களையும் செடிகொடிகளையும் கண்டான்.
அவன் பல கொடிகளை அறுத்து பின்னி நீண்ட கயிறாக்கி ஊஞ்சல் போலக்கட்டினான். அதில் அங்கங்கு வண்ணமலர்களைச் சொருகி அழகுபடுத்தினான்.
அதன் பின் ஒரு மரத்தின் பின் உட்கார்ந்து கொண்டு கந்தர்வக் கன்னிகைகள் வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தான்.
அன்று பெளர்ணமி. அப்போது இரவு வேளை.
நிலா பால் போல் காய்ந்து கொண்ருந்தது. நள்ளிரவானதும் சில கந்தர்வ கன்னிகைகள் வந்தார்கள்.
அவர்கள் தடாகத்தில் இறங்கிக்குளித்து விட்டு கரைக்கு வந்தார்கள்.
அப்போது அவர்களில் ஒருத்தி கோவிந்தன் கட்டியிருந்த அழகிய ஊஞ்சலைப் பார்த்தாள். அதில் உட்கார்ந்து அவள் ஊஞ்சல் ஆடினாள்.
சற்று நேரமானதும் மற்ற கந்தர்வக் கன்னிகைகள் 'மதுமதி!' நேரமாகிறது வா.
நம் லோகத்திற்குப் போகலாம்' என்றார்கள்.
மதுமதியோ நீங்கள் போய்க் கொண்டிருங்கள்.
நான் சற்று நேரம் ஊஞ்சலாடி விட்டுப் பிறகு வருகிறேன்' என்றாள்.
எனவே அக்கன்னிகைளும் சென்று விட்டார்கள்.
மதுமதி சற்று நேரம் ஊஞ்சலாடி விட்டுக் கீழே இறங்கிப் புறப்படலானாள்.
அப்போது கோவிந்தன் ஓடி வந்து அவள் முன் நின்று ‘'நான் கட்டிவைத்த ஊஞ்சலில் இவ்வளவு நேரம் ஆடினீர்களே.
அதற்கு பதில் உதவியாக எனக்கு ஏதாவது செய்யாமல் போவது நியாயமா?’' என்று கேட்டான்.
மதுமதியும் அவனை வியப்புடன் பார்த்து, 'நீ யார்? உனக்கு என்ன வேண்டுமோகேள். அதைக் கொடுக்கிறேன்' என்றாள்.
கோவிந்தனும் தன்னைப் பற்றிக் கூறி '’எனக்குப் பறக்கும் குதிரை வேண்டும்.
அதைக் கொண்டு போய் அரசகுமாரி புஷ்பலதாவிடம் கொடுத்து விட்டு அவளை நான் மணக்கப் போகிறேன்'' என்றான். மதுமதியும் 'ஓ! பறக்கும் குதிரை யா? அதை என்னால் கொடுக்க முடியாதே.
உனக்கு நீ கேட்பதைக் கொடுப்பதாக வாக்களித்து விட்டேன், அதனால் உன்னை என் கந்தர்வ லோகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.
அங்கு பல பறக்கும் குதிரைகள் உள்ளன.
அவற்றில் ஒன்றைக் கொண்டு செல்வது உன் பொறுப்பு' என்றாள்.
கோவிந்தன் அதற்குச் சம்மதிக்கவே மதுமதி அவனை ஒரு முத்து மாலையாக மாற்றித் தன் கழுத்தில் அணிந்து கொண்டு கந்தர்வ லோகத்திற்குச் சென்றாள்.
அங்கே போனதும் அவள் முத்து மாலையைக் கழற்றி கோவிந்தனை முன் போல மானிடனாக்கி கந்தர்வ மன்னனின் குதிரைலாயத்தைக் காட்டி 'இங்கு பல பறக்கும் குதிரைகள் உள்ளன.
அவற்றில் ஒன்றை நீ உன் சாமர்த்தியத்தால் பூலோகத்திற்குக் கொண்டு செல்லலாம்' என்று கூறிவிட்டுச் சென்றாள்.
கோவிந்தன் அவற்றில் ஒரு குதிரை மிக அழகாக இருப்பதைப் பார்த்தான்.
உடனே அவன் அங்கிருந்த பூங்காவிலிருந்து மலர்களைப் பறித்து வந்து மாலைகள் கட்டி அக்குதிரைக்கு அணிவித்து அலங்காரம் செய்தான்.
அதை எப்படி பூலோகத்திற்கு ஓட்டிச் செல்வது என்று யோசிக்கலானான்.
அன்று கந்தர்வ மன்னனின் பிறந்த நாள்.
அன்று அம்மன்னன் தன் லாயத்திருந்து ஒரு நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்து அந்த ஆண்டு முழுவதும் அதன் மீது அமர்ந்து சவாரி செய்வது அவன் வழக்கம்.
அந்த வழக்கப்படியே அந்த ஆண்டும் குதிரையைத் தேர்ந்தெடுத்தான்.
அது பறக்கும் குதிரை. அதற்கு அந்த கௌரவம் கிட்டியதற்கு கந்தர்வர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.
அன்றிரவு கோவிந்தன் மன்னனின் லாயத்திற்குச் சென்றான்.
அக் குதிரையும் ‘எனக்கு ஒரு ஆண்டு காலம் மன்னனின் சவாரிக் குதிரையாக இருக்க வழி செய்தாய்.
இதற்குக் கைமாறாக உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'
என்று கேட்டது. கோவிந்தனும் தன்னைப் பற்றி விவரமாகக் கூறித் தான் அரசகுமாரி புஷ்பலதாவை மணக்க விரும்புவதாகக் கூறினான்.
அது கேட்டு அக்குதிரை பலமாகச்சிரித்து ‘மானிடனே! நீ இப்படி ஆசைப்படுவது சரியல்ல.
மாலை கட்டிப் பிழைக்கும் நீ அரசகுமாரியை மணக்க ஏன் ஆசைப்படுகிறாய்? கந்தர்வலோகத்துக் குதிரைகள் பூவுலகிற்குப் போகக்கூடாது.
ஆயினும் உனக்கு கைமாறு செய்வதாக நான் கூறி விட்டதால் உன் விருப்ப படி செய்கிறேன்.
என் மீது உட்கார்' என்றது.
கோவிந்தனும் ஆழ்ந்து யோசித்தவாறே அந்தப் பறக்கும் குதிரை மீது ஏறி அமர அது அவனை காஞ்சனபுரம் கொண்டு போய் இளவரசி புஷ்பலதா முன் நிறுத்தியது. கோவிந்தனும் திகைத்துப் பதுமைபோல நின்ற அரசகுமாரியிடம் 'அரசகுமாரியே! இதோ பறக்கும் குதிரை.
இதன் மீது அமர்ந்து ஆகாயத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறந்து மகிழுங்கள். நான் போய் வருகிறேன்' எனக் கூறி வணங்கி விட்டு அவளைத் திரும்பிக்கூட பாராமல் அங்கிருந்து சென்று விட்டான். வேதாளம் இக்கதையைக் கூறி 'அரசகுமாரியை மணக்கக் கடும் முயற்சி செய்த கோவிந்தன் முடிவில் அவளை மணக்காமலே ஏன் போய் விட்டான்? இக்கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் பதில் கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்' என்றது. விக்கிரமனும்'கோவிந்தன் அதிகம் படிக்காதவன்.
பட்டர் சொன்ன பிறகே பறக்கும் குதிரை பூலோகத்தில் கிடையாது என்றும் கந்தர்வ லோகத்திலோ அல்லது தேவலோகத்திலோ இருக்கும் என்று தெரிந்து கொண்டான். கந்தர்வ லோகக் குதிரை அவன் மிகவும் ஏழை என்பதையும் அரசகுமாரி பணக்காரி என்றும் எடுத்துக் கூறிய போது தான் அவனுக்குத் தன் நிலையும் அந்தஸ்தும் என்ன என்று தெரிந்தது.
அதுவரை அவன் தன் படிப்பு பற்றியோ பணம் பற்றியோ நினைத்துப் பார்த்தது கூட இல்லை.
பறக்கும் குதிரை அவனது ஆசை சரியல்ல என்று கூறியது அவனது ந்தனையைக்கிளறி விட்டது.
அதன் முடிவுதான் அவன் அரச குமாரியை மணக்காமல் செய்து விட்டது. இது அவனது சரியான முடிவே' என்றான். விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக்கிளம்பிப் போய் முருங்க மரத்தில் மீண்டும் ஏறிக் கொண்டது.
பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பிரம்மாஸ்திரம் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக கருதப்படுகிறது. இது முழு ராணுவத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்றும், தீவிர வானிலை மாற்றங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் குறைதல் உள்ளிட்ட கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதன் அழிவு சக்தி காரணமாக அதன் பயன்பாடு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.
நீங்கள் பக்தி நிலையில் இருக்கும்போது, நீங்கள் உணர்வீர்கள் என்று நாரத பக்தி சூத்திரம் கூறுகிறது - 1. பகவான் மீது அதிக அன்பு 2. அழியாத பேரின்பம் 3. பரிபூரணம் 4. என்றென்றும் திருப்தி 5. இனி தேவை இல்லை 6. இனி துக்கங்கள் இல்லை 7. யாரையும் அல்லது எதையும் வெறுப்பு இல்லை 8. உலகிய விஷயங்களில் ஆசை இல்லை 9. கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உற்சாகம் 10. தன்னம்பிக்கையுடன் இன்னும் பகவானின் சிந்தனையில் இருக்கிறது.